'பகர்பித்த விந்தையிலாது மேகம் வராது' என பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் ஒரு பாட்டில் குறிப்பிடுகிறார். அதாவது, பித்தத்தின் ஆதிக்கம் இன்றி எந்த மேகநோயும் வராது என்று அர்த்தம். குறிப்பாக உடலில் உள்ள பிரகாச பித்தம் (ஒள்ளளித்தீ), வண்ணப்பித்தம் (வண்ண அழல்)... இந்த இரண்டின் குறைபாடு காரணமாக தோலில் வெண்புள்ளி தோன்றும். ஆங்கிலத்தில் இதை 'மெலனின் நிறமி குறைபாடு' என்பார்கள். இந்த நோய் ஆரம்பத்தில் சருமத்தில் சின்ன புள்ளிகள் போல் தோன்றும். சிலருக்கு புள்ளிகளில் அரிப்பு, தோல் வறட்சி, மரத்துப்போதல், கூடுதலான வியர்வை, முழு உணர்ச்சி இல்லாதது போன்ற குணங்கள் இருக்கும். சிலருக்கு இந்த குணங்களில் ஏதாவது ஒன்றிரண்டு குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கும். இந்த வெண்குட்டம் நோய்க்கு வாத வெண்படை, பித்த வெண்படை, கபவெண்படை என மூன்று உட்பிரிவுகளும் உண்டு. வாத வெண்படை சிறிது சொரசொரப்பாக, சிவந்து வெளுத்திருக்கும். பித்த வெண்படை செந்தாமரை இதழ் போல் சிவந்து, வெளுப்பாகப் பரவும். பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். முடி உதிரும். கப வெண்படை தும்பைப்பூப் போல் வெண்மையாக தடித்துப் பரவும். நமைச்சல் உணர்வு இருக்கும்'' என்று அறிகுறிகள் சொன்னவரிடம், இவற்றுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டோம். "இந்த வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் தருகிறோம். வெளிமருந்தாக தைலம், பசை உண்டு. மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்'' என்றார். இந்த நோய் குறித்து தனியாக ஆய்வு நடத்தி முடித்திருக்கிறார் மருத்துவர் ஏ.சதீஷ்குமார். "பதின்மூன்று வயது வரையுள்ள குழந்தை நோயாளி களை ஆய்வு செய்ததில், அதில் மூன்று சதவிகிதத்தினருக்கு பெற்றோர் வழியாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகம் வருகிறது'' என்ற சதீஷிடம், "பொதுவாக சித்த மருத்துகள் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிற்காலத்தில் பாதிப்பு வரும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே..?'' என்று கேட்டோம். |
No comments